சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலில், திமுக நிர்வாகி ஒருவரின் தொடர்பு வெளிப்பட்டு 10 நாட்களாகிறது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2G விசாரணையின் போது, தனது தந்தை மற்றும் முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி செய்ததைப் போல, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே முயற்சித்துக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ₹2000 கோடி மதிப்பிலான சூடோஎபெட்ரீன் போதைப்பொருளைக் கடத்திய, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுக நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்ற செய்தி கடந்த பிப்ரவரி 24 அன்று வெளியில் தெரிய வந்தது.
கடந்த பிப்ரவரி 28 அன்று, தமிழகத்திற்குக் கொண்டு வரவிருந்த சுமார் ₹1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தால், நடுக்கடலில் கைப்பற்றப்பட்டன.
கடந்த மார்ச் 1 அன்று, மதுரையில் சுமார் ₹180 கோடி மதிப்பிலான மெத்தாபெட்டமைன் போதைப் பொருள்கள், வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.
மார்ச் 5, இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் சுமார் ₹108 கோடி மதிப்புள்ள ஹசிஷ் போதைப் பொருள், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், சென்னையில் நேற்று பேசும்போது, போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகியின் தொடர்பைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும், போதைப்பொருளுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்று தமிழக மக்களுக்கு உறுதியளித்திருத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலில், திமுக நிர்வாகி ஒருவரின் தொடர்பு வெளிப்பட்டு 10 நாட்களாகிறது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2G விசாரணையின் போது, தனது தந்தை மற்றும் முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி செய்ததைப் போல, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே. இன்னும் எத்தனை காலம்தான் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்?