கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் உள்பட 160-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். விஷச் சாராயம் குடித்த பலரும் அடுத்தடுத்து கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். இதில் பலரது உடல்நிலை மிக மோசமான நிலைமையில் இருந்ததால், அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பலர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தது, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். 12 பேருக்கு கண் பார்வை முழுமையாக பறிபோயிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நேற்று வரை இச்சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், மற்றும் இன்று மாலை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை, எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணம் என்ன, கள்ளச்சாராய விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கபட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ள தேசிய மனித உரிமை ஆணையம், மதுபானங்களின் உற்பத்தி, உடைமை, போக்குவரத்து, கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு பிரத்யேக அதிகாரம் உள்ள நிலையில், தவறு எங்கு நடந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு வாரத்திற்குள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.
ஏறத்தாழ 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மரணமானது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிலிருந்து மக்களை திசை திருப்பும் விதமாக ஆர்.எஸ்.பாரதி தேவையில்லாமல் கள்ளச்சாராய விவகாரத்தை அண்ணாமலையை இழுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரத்தில் அண்ணாமலையின் சதி உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார். இந்நிலையில், அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 3 நாட்களில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோராவிட்டால், ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.