நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மோடி அரசை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
நவராத்திரியில் மீன் சாப்பிடுகிறேன் என்று காட்டும் இவர்கள், முகலாய கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களை மதச்சார்பற்றவர்கள் என அழைத்து கொள்வதாகவும் அவர் கூறினார். ஆனால் தேசம் எப்போதுமே மதச்சார்பற்றது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சமாதானம் என்ற பெயரில் மதச்சார்பின்மையை அழிக்க முயன்றதாகவும், சனாதனத்தை இழிவுபடுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில், பாஜக, ஜேடியூ (ஜனதா தளம்- யுனைடெட்), எல்ஜேபி (லோக் ஜனசக்தி கட்சி) ஆகிய கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜக 24.1 சதவீத வாக்குகளுடன் 17 இடங்களையும், ஜேடி(யு) 22.3 சதவீத வாக்குகளுடன் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. எல்ஜேபி 8 சதவீத வாக்குகளுடன் ஆறு இடங்களில் வெற்றி பெற்றது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், மற்றும் RLSP (ராத்ரிய லோக் சம்தா கட்சி)கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.