தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதியின் நிகழ்ச்சியில் ஒரு காரில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை பெற்று, மற்றொரு காரில் இருக்கும் நிர்வாகியிடம் போலீஸ்காரர் ஒருவர் கைமாற்றிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர், முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கன்னியாகுமரில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தார். இடையே, சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோயிலுக்கும் சென்றிருந்தார். அப்போது, உதயநிதியும், மேயர் மகேஷும் தலைப்பாகை மற்றும் திருநாமம் அணியாமல் சென்றனர், இச்சம்பவம் பெரும் சர்ச்சையானது. பல்வேறு தரப்பிலிருந்தும் உதயநிதிக்கு எதிர்ப்பு வலுத்தது. குறிப்பாக, அய்யாவழி மதபோதகர் ஶ்ரீகுரு சிவசந்திர சுவாமிகள் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, கோயிலின் தலைமை பதி நிர்வாகி பாலகணபதி, அய்யாவழி மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கிடையே புதிதாக மற்றொரு சர்ச்சையிலும் உதயநிதி சிக்கி இருக்கிறார். அதாவது, கன்னியாகுமரியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார் உதயநிதி. பின்னர், அங்கிருந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்குச் சென்றார். அப்போது, கே.வி.சி. நகர் மேம்பாலம் அருகே நெல்லை மாவட்ட தி.மு.க.வினர், உதயநிதிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது, உதயநிதியின் பாதுகாப்புக்காகச் சென்ற எஸ்கார்டு வாகனத்தில் இருந்து இறங்கி வந்த போலீஸ்காரர் ஒருவர், யாரிடமிருந்தோ கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி, உதயநிதியின் பின்னால் சென்ற காரில் இருந்த கட்சி நிர்வாகியிடம் வழங்குகிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்த பணம் யாரிடமிருந்து பெறப்பட்டது. யாரிடம் கொடுக்கப்பட்டது. எதற்காக கொடுக்கப்பட்டது. பணத்தை கைமாற்றிய போலீஸ்காரர் யார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதான் மீண்டும் உதயநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.