திருநெல்வேலியில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லைதிருத்து பகுதியைச் சேர்ந்தவர் இருந்தவர் எம்.எஸ்.முருகன். மானூர் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளராக இருந்தார். ஆன்மிக பணிகள் மூலம் மக்களுக்கு சேவையாற்றி வந்த முருகனுக்கு, சில சமூக விரோதிகளால் தொடர்ந்து இடையூறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்று மானூர் ஒன்றியம் களக்குடி – மானூர் சாலையில் முகத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் முருகன். அவருக்கு அருகே அவரது இரு சக்கர வாகனமும் கிடந்தது. தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், அவரது முகம் முழுவதும் காயங்கள் காணப்படுகின்றன. இதுதான், அவரது குடும்பத்தினருக்கும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முருகனை யாரேனும் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் மர்ம மரணம் என்று வழக்குப் பதிவு செய்து, முருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, முருகனின் குடும்பத்தினரும், உறவினர்களும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்பினரும் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் குவிந்திருக்கிறார்கள். முருகனின் மர்ம மரணத்தில் இருக்கும் முடிச்சுகளை போலீஸார் உடனடியாக அவிழ்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்த களக்குடி – மானூர் சாலை 20 அடி அகலம் கொண்ட எந்த வளைவுகளும் இல்லாத நேரான சாலை. சாலையிலிருந்து 5 மீட்டர் தள்ளி முருகனும், 10 மீட்டர் தள்ளி அவரது இரு சக்கர வாகனம் கிடந்திருக்கிறது.
மேலும், வாகனங்களின் உடைந்த பாகங்கள் வெவ்வேறு பகுதிகளில் கிடந்திருக்கிறது. தவிர, தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் முகம் மற்றும் தாடை பகுதியில் பலமான காயங்கள் ஏற்பட்டது எப்படி? எல்லாவற்றுக்கும் மேலாக, முருகனின் நெற்றி பகுதியில் ஆயுதங்களைக் கொண்டு பலமாக அடித்தது போன்ற காயங்கள் காணப்படுகின்றன. அதேபோல, முருகனின் இடது மார்பு பகுதியில் சட்டை கிழிந்திருக்கும் நிலையில், பலமாக தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அதோடு, வாகனம் வலதுபுறமாக விழுந்து கிடக்க, முருகன் இடதுபுறமாக விழுந்து கிடக்கிறார். இவை அனைத்தும் பலமான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே, முருகனின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை போலீஸார் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே, முருகனின் அண்ணன் ராமகிருஷ்ணன், திருநெல்வேலி எஸ்.பி. மற்றும் கலெக்டரிடம் அளித்திருக்கும் மனுவில், தனது தம்பி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பொறுப்பில் இருந்ததால், பயங்கரவாதிகளால் அவரது மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆகவே, அவரது பிரேதப் பரிசோதனை முழுவதையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அதோடு, இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மேலும், முருகனின் குடும்பத்துக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.