புதிய பாரதத்தை உருவாக்க தேசியவாதம் மிகவும் அவசியம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
சென்னை மந்தைவெளியில் ‘தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜுகேஷன் சொசைட்டி’ அமைந்திருக்கிறது. இதன் சார்பில், ‘ராதா சுவாமி’ சிறப்பு மையம் திறப்புவிழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ராதா சுவாமி சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, “மாணவர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் திறக்கப்பட்டிருக்கும் இந்த ‘ராதா சுவாமி’ சிறப்பு மையம், எதிர்காலத்தில் நிச்சயம் சிறந்த ஆளுமைகளை உருவாக்கும். சமீபத்தில் வெளியான யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிக்கையில், இந்தியாவில் கலைப் படிப்புகளை சேர்ந்தவர்களே 70% பேர் முதுநிலை படிப்பை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அறிவியல் பயிலும் மாணவர்களைவிட, கலை சார்ந்த படிப்புகளை படிப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் இருக்கிறது. அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் பயிலாததற்கு காரணம், அறிவியல் படிப்புகளை பயிற்றுவிக்க முறையான ஆசிரியர்கள் இல்லாததுதான். ஆகவே, தரமான ஆசிரியர்கள் மிகவும் முக்கியம். இதற்குத் தீர்வு தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை நிச்சயம் புதிய மாற்றத்தை கொண்டு வரும். புதிய கல்விக்கொள்கை நமக்கான கல்விக் கொள்கையாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டுப் பற்றை வளர்க்கவும் இது உதவும். குறிப்பாக, புதிய பாரதத்தை உருவாக்க வேண்டுமானால் தேசியவாதம் மிகவும் முக்கியம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் க்ரீன் கார்டு பெறுவதை பெருமையாகக் கருதினார்கள். தற்போது, அந்த நிலை சற்றே மாறி வருகிறது. ஆகவே, புதிய பாரதத்தை உருவாக்க வேண்டுமானால் இந்தியாவில் இருக்கும் குடிமக்கள் முதலில் பெருமை கொள்ள வேண்டும்” என்றார்.