பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா இந்த முறையும் தங்கம் வெல்வார் என்று இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
நேற்று நடந்த ஒலிம்பிக் நிகழ்ச்சியின்போது நெகிழ்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்தது. அதில் வெள்ளி பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா இந்தியாவின் தேசிய கொடியையும், வெண்கல பதக்கத்தை வென்ற ஆண்டர்சன் பீட்டர் அவரின் நாட்டு தேசிய கொடியையும் பெருமையாக கைகளில் பிடித்து புகைப்படம் எடுத்து கொண்டிருக்க தங்கப்பதக்கத்தை வென்ற பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் அவரின் நாட்டு தேசிய கொடியை தவறவிட்ட நிலையில் நீரஜ் சோப்ரா அர்ஷத் நதீமை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து, நீரஜ் சோப்ரா கூறுகையில், “நாட்டிற்காக பதக்கம் வெல்லும்போதெல்லாம் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். தற்போது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து எங்கள் செயல்திறனை மேம்படுத்துவோம். இந்த போட்டி மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அவர்களுக்கான நாள் என்று ஒன்று இருக்கும். அதுபோல் இன்று அர்ஷத்தின் நாள். நான் கடினமாக முயற்சி செய்து என்னுடைய சிறந்ததை கொடுத்தேன். ஆனால் சில விஷயங்களை நான் கவனித்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நமது தேசிய கீதம் இன்று இசைக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக வேறு எங்காவது இசைக்கப்படும். இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.