அடுத்தாண்டு கருணாநிதி நூற்றாண்டு விழாவில் மோடியும், அமித்ஷாவும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள் என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறியிருக்கிறார்.
மோசடி மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், திடீர் நெஞ்சுவலி காரணமாக ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 3 இடத்தில் அடைப்பு இருப்பதாகவும், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதேசமயம், கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, அறுவைச் சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி நேற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து, தி.மு.க. சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஆகவே, அவரை கைது செய்துவிட்டால் கொங்கு மண்டலத்தில் தாமரை மலர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். நிகழாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. அதேபோல, அடுத்தாண்டும் கலைஞர் நூற்றாண்டு விழாவை கோவையில் நடத்துவோம். அப்போது, பிரதமர், முதல்வர் என எல்லோரும் கலந்துகொண்டு கலைஞர் வாழ்க என்று சொல்வார்கள். அப்போது, மோடியும், அமித்ஷாவும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இவரது இந்த பேச்சுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அரசியலில் ஆட்சியில் இருப்பதும், இல்லாததும் வெவ்வேறு விஷயங்கள். ஆனால், இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இவர் எந்த அடிப்படையில் இப்படி பேசினார் என்று விளக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், 2ஜி வழக்கில் திகார் சிறையில் களி திண்றது மறந்து விட்டதுபோல என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.