சென்னையில் அமைந்திருக்கும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பின் அலுவலகத்தை, என்.ஐ.ஏ. காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளில் ஒன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு. நாட்டில் பயங்கரவாத செயல்கள் அரங்கேறாமல் தடுப்பது, நாட்டுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பது உள்ளிட்டவைதான் இந்த அமைப்பின் முக்கியப் பணி. 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் மும்பையில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாதத்துக்குப் பிறகு, இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சமீபத்தில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டு, ஆயுதங்கள், முக்கிய ஆதாரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தற்போது இந்த என்.ஐ.ஏ. அமைப்பு டெல்லி, ஹைதராபாத், ஜம்மு உட்பட 11 மாநிலங்களில் காவல் நிலையங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பயங்கரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரிப்பதற்காக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சென்னை புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ. அமைப்பின் அலுவலகம் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சக எழுத்துப்பூர்வ அறிவிப்பின் கீழ் அதிகாரம் பெற்றிருந்தாலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி தேவை. ஆகவே, சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தை காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்தாண்டு மே மாதம் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. எனினும், இம்மனு பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் இருந்து வந்தது. இதன் காரணமாக, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) தொடர்பான 15 வழக்குகளை டெல்லியிலுள்ள அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்து, சென்னை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தை, என்.ஐ.ஏ. காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதோடு, தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை என்.ஐ.ஏ. சென்னை கிளை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆகவே, ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் தமிழக வழக்குகளை சென்னை கிளைக்கே மாற்றி விசாரணை நடத்தவிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. காரணம், தடை செய்யப்பட்டிருக்கும் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள், தமிழகத்தில்தான் கணிசமான அளவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அல்கொய்தா, சிமி, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.