என்.ஐ.ஏ. ரெய்டை கண்டித்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் சிமி என்றொரு பயங்கரவாத அமைப்பு இருந்தது. இந்த அமைப்பினர் இஸ்லாமிய நாடுகளில் செயல்பட்டுவரும் அல்கொய்தா, அல் உம்மா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நாட்டுக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டியதோடு, பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற நிதியும் திரட்டி வந்தனர். மேலும், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஆயுதங்கள், வெடிகுண்டுகளை கையாளுதல் போன்ற பயங்கரவாத பயிற்சி அளித்து தற்கொலைப் படைத் தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு தயார்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆகவே, சிமி அமைப்பை இந்திய அரசு தடை செய்தது.
இதன் பிறகு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தொடங்கப்பட்டதுதான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பு. பழைய சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் புதிய பெயரில் பி.எஃப்.ஐ. அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. மேலும், சிமி அமைப்பு என்னென்ன பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோ, அதே நடவடிக்கைகளில் பி.எஃப்.ஐ. அமைப்பும் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) குற்றம்சாட்டி வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பலரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் கூட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே, பி.எஃப்.ஐ. அமைப்பினர் மீது மாஸ் ரெய்டு ஒன்றை நடத்த என்.ஐ.ஏ. திட்டமிட்டது. அதன்படி, நேற்று முன்தினம் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. டீம் மாஸ் ரெய்டை நடத்தியது. இதில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வயர்லெஸ் போன், வாக்கி டாக்கிகள், ஆயுதங்கள், கணக்கில் வராத 120 கோடி ரூபாய்க்கான ஆதாரம் என பல்வேறு ஆவணங்களை என்.ஐ.ஏ. கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாஸ் ரெய்டு பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
எனவே, என்.ஐ.ஏ. ரெய்டை கண்டித்து நேற்று கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் இப்போராட்டத்தின்போது அரசு பஸ்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த கேரள உயர் நீதிமன்றம், தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு, மேற்படி அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், மகாராஷ்டிராவில் வேறுமாதிரியான சம்பவம் அரங்கேறியது. அதாவது, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடத் தொடங்கினர்.
இதையடுத்து, மேற்படி கோஷம் எழுப்பிய அடிப்படைவாதிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம்தான் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நம் நாட்டில் இருந்துகொண்டு எதிரி நாட்டுக்கு ஆதரவாக கோஷமிடுவதா என்று கொந்தளிக்கிறார்கள். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிதேஷ் ரானே, ராம் சத்புட் ஆகியோர், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியவர்கள் மீது தேசதுரோக வழக்குப் பதிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பி.எஃப்.ஐ. அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று அடிப்படைவாதிகள் கோஷம் எழுப்பிய வீடியோ தற்போது வைரலாகி, நாட்டு மக்களிடையை ஆவேசத்தை கிளப்பி இருக்கிறது.