பழநி முருகன் கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு அடங்கிய பதாகைகள் கோவில் நிர்வாகத்தினரால் சமீபத்தில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு பக்தர்கள் எதிர்பால் அந்த பதாகைகள் அகற்றப்பட்டது. ஆனால் இந்த பதாகைகளை மீண்டும் வைக்க உத்தர விடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அவர் தன்னுடைய தீர்ப்பில், இந்துக்கள் அல்லாதவர்கள் பழநி முருகன் கோவிலில் கொடிமரத்தை தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது. இந்துக்கள் அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு அடங்கிய பதாகைகளை கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்துக்கள் அல்லாத பிற மதத்தை சார்ந்தவர்கள் பழநி முருகன் கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை தரிசிக்க விரும்பினால், அவர்களுக்காக தனி பதிவேடு கோவிலின் நுழைவு வாசலில் வைக்க வேண்டும்.
மற்ற மதங்களை சேர்ந்தவர்கள், சுவாமி மீது நம்பிக்கை கொண்டு இங்கு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி அளித்தால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.