விஜயதசமி மற்றும் தேசிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். ஆனால் காவல் துறை அதிகாரிகள் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அனுமதி அளிக்க மறுத்த நீலகிரி,கோவை.திருப்பூர் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 பகுதிகளில் உள்ள காவல்துறை ஆய்வாளர் முதல் டி.ஜி.பி ஆகியோர்மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் உள்துறை முதன்மை செயலர், டி.ஜி.பி., மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு என, தனித்தனியாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (01-11-2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு .அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிகாட்டுகிறது. தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
…