இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல் நல்ல மனிதராகவும் நம் அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர்.
இந்திய கிரிக்கெட் அணி அடிமட்டத்திலிருந்த போது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கபில்தேவ். அவருக்குப் பின்னர் இந்தியாவால் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்ட போது, 2007 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றில் கூட வெற்றி பெறாமல் வெளியே வந்தது.
அப்போது முதன் முதலாக அறிமுகமான டி20 உலகக்கோப்பையில் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாது என்று அனைவரும் நினைத்த நேரத்தில் 2007 டி20 உலகக்கோப்பையை மகேந்திர சிங் தோனி வென்று கொடுத்தார்.
அப்போது இந்திய கிரிக்கெட் மீண்டும் புத்துயிர் பெற்று தலை நிமிர ஆரம்பித்தது. அதன்பிறகு 28 வருடங்கள் கழித்து 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.
அதன் பின்னர் 2013 சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 என்று தோனி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளையும், மகுடங்களையும் வென்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் நிரந்தர வீரராக இருந்தவர் தோனி.
ஒருநாள் கிரிக்கெட்டில் 350 போட்டிகள் விளையாடி 10,773 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களையும் விளாசியுள்ளார். இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் என இரு தரப்பையும் தோனி ஒற்றை ஆளாகக் கையாண்டது இன்று வரை ஆச்சரியம் தான்.
பேட்டிங் மட்டும் இல்லாமல் அவரது விக்கெட் கீப்பிங்கு நிகர் அவரே என்பது ஆச்சரியம் இல்லை. ஐசிசி பொறுத்தவரை DRS என்றால் டிசிஷான் ரிவிவ் சிஸ்டம் ( decision review system ) ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை தோனி ரிவிவ் சிஸ்டம் ( Dhoni review system ).
அதன் காரணமாகவே தோனி இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களை அணிக்குள் நிரந்தர வீரராக மாற்றியதிலும் தோனியின் பங்கு உள்ளது.
அதேபோல் சரியான நேரத்தில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடிய பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது.
இதனாலேயே தோனியின் ஜெர்சியின் எண் 7 ரசிகர்களிடையே உணர்வுப்பூர்வமான ஒன்றாக அமைந்தது. தோனி ஓய்வுபெற்றாலும் ஜெர்சி எண் 7 இதுவரை எந்த வீரருக்கும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜெர்சி எண் 7-க்கு ஓய்வு கொடுத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இனி தோனி பயன்படுத்திய ஜெர்சி எண் 7 எந்த வீரருக்கும் அளிக்கப்படாது. ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண்10-க்கு ஓய்வு கொடுத்து பிசிசிஐ அறிவித்தது.
அதன்பின் தோனியின் ஜெர்சியான எண் 7-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இது பிசிசிஐ தரப்பில் தோனி அளிக்கப்பட்ட மரியாதையாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஓய்வுக்குப் பின் பிசிசிஐ நிகழ்ச்சியில் பங்கேற்காத தோனிக்கு மரியாதை தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்.