நுபுர் ஷர்மாவின் தலையை துண்டித்து வருபவர்களுக்கு தனது வீட்டையும், சொத்தையும் எழுதி வைப்பதாக அறிவித்த அஜ்மீர் தர்காவின் முஸ்லிம் மதகுருவை போலீஸார் கைது செய்தனர்.
பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ஹிந்துக்களின் கடவுளான சிவபெருமானை இழிவுபடுத்தும் வகையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசினார். இதை நுபுர் ஷர்மாக பலமுறை கண்டித்தும் கேட்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால், பதிலுக்கு இஸ்லாமிய மத புத்தகத்தில் முகமது நபி பற்றி இடம்பெற்றிருக்கும் கருத்தை சுட்டிக்காட்டினார். ஆனால், Alt நியூஸ் என்கிற பெயரில் செய்தி நிறுவனம் நடத்தும் இயக்குனர்களில் ஒருவரான முகமது சுபைர், அந்த நிகழ்ச்சியில் நுபுர் ஷர்மா பேசியதை மட்டும் எடிட் செய்து, இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை டேக் செய்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இஸ்லாமியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் மதகுருவாக இருக்கும் சல்மான் சிஸ்தி, நுபுர் ஷர்மாவின் தலையை துண்டித்து வருபவருக்கு தனது வீட்டையும், சொத்தையும் எழுதித் தருவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். எனினும், இந்த வீடியோ இஸ்லாமியர்கள் மத்தியில் மட்டும் வலம் வந்ததே தவிர, பொதுவெளியில் வலம் வரவில்லை. இதனால், இப்படியொரு வீடியோ வெளிவந்த விவரம் யாருக்குமே தெரியவில்லை. இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வந்த கன்ஹையா லால் என்பவர், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரால் தலை துண்டித்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதன் பிறகுதான், இந்த வீடியோ பொதுவெளியில் பரவ ஆரம்பித்தது. ஆகவே, மேற்படி வீடியோவை போலீஸார் ஆய்வு செய்ததில், கன்னையா லால் படுகொலைக்கு முன்பே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதும், சமீபத்தில்தான் இது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, இரு தரப்பினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சல்மான் சிஸ்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த, சல்மான் சிஸ்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் சல்மான் சிஸ்தியை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, துப்பாக்கிச் சூடு என பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. பின்னர், சல்மான் சிஸ்தியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஒருவேளை அந்த வீடியோவை குடி போதையில் பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறியதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.