ஒடிஸாவில் பழங்குடியினரை கட்டாய மத மாற்றம் செய்ததாக, சர்ச்சுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாடு முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவலாக மதமாற்றம் நடந்து வந்தாலும், தமிழகம் மற்றும் கேரளாவில்தான் அதிக அளவிலான மத மாற்றங்கள் நடந்திருக்கின்றன, நடந்தும் வருகின்றன. அந்த வகையில், ஒடிஸா மாநிலத்திலும் கடந்த பல வருடங்களாக மத மாற்றம் நடந்து வருகிறது. 2011-ம் ஆண்டில் ஒடிஸாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தங்கர்டிஹி கிராமத்தில் கட்டாய மதமாற்றம் செய்ததாக கிறிஸ்தவ பாதிரியார் மகேந்திர சாஹு கைது செய்யப்பட்டார். மேலும், 2018-ம் ஆண்டு கஜபதி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாற மறுத்த தபீர் பாண்டா என்பவரை அவரது மனைவி சுரபியும், மாமியாரும் தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இவ்வாறு கட்டாய மத மாற்றம் செய்யும் கிறஸ்தவ மிஷனரிகள் மீது, ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் முதல்வர் நவீன் பட்நாயக் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள கெல்டுவா கிராமத்தில் வசிக்கும் அப்பாவி பழங்குடியினரை வலுக்கட்டாயமாக கிறஸ்தவர்களாக மாற்றி இருக்கிறார்கள் மிஷனரிகள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மேல் புகார் வந்தது. இதையடுத்து, மேற்படி மதமாற்றம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளது. இதில், கட்டாய மத மாற்றம் நடந்தது உண்மை என்பதும், இதன் காரணமாக அங்கு வசிக்கும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமை சீர்குலைந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கெல்டுவா கிராமத்தில் உள்ள தேவாலயத்தை இழுத்துப் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், அப்பகுதியில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தனர். மேலும், தேவாலயத்திற்கு அருகில் 3 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.