ஒடிஸாவில் செல்போன் திருடிய நபரை லாரியின் முன்பக்கமாக கட்டிவைத்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி அச்சுறுத்திய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஒடிஸா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் மார்ஷாகாய் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரா ஸ்வைன். 25 மதிக்கத்தக்க இளைஞரான இவர், பகுதிநேர லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். எனவே, மற்ற லாரி டிரைவர்களிடம் வேலை ஏதும் இருக்கிறதா என்று கேட்டபடி வந்திருக்கிறார். அப்போது, ஒரு லாரியின் டிரைவர் திடீரென தனது செல்போனை காணவில்லை என்று கத்தி இருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்த இதர லாரி டிரைவர்கள் கஜேந்திராவை பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது, செல்போனை திருடியது அவர்தான் என்பது தெரியவந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர்கள், கஜேந்திராவின் இரு கைகளையும் லாரியின் முன்பக்கமாகக் கட்டி வைத்ததோடு, அவரது கழுத்திலும் செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள்.
பின்னர், லாரியோடு சேர்த்து கஜேந்திராவை கட்டி வைத்து லாரியை அதிவேகமாக ஓட்டி, கஜேந்திராவை அச்சுறுத்தி இருக்கிறார்கள். இந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விட்டார்கள். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், இதுகுறித்து கஜேந்திரா புகார் அளிக்காததால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், இச்சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஒடிஸா மனித உரிமைகள் ஆணையம், ஜகத்சிங்பூர் எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி, உடனடியாக விசாரணையை தொடங்கி 15 நாட்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.