வேன், லாரிகளில் கடத்திச் சென்றால்தானே பிடிக்கிறார்கள் என்று கருதி டேங்கருக்குள் வைத்து பசுமாடுகளை கடத்திய ஒடிஸாவைச் சேர்ந்த ஷேக் மிராஜ் என்பவரை போலீஸார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
நாட்டில் இறைச்சிக்காக பசுமாடுகள் கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேற்குவங்க மாநிலத்துக்கு பசுமாடுகள் கடத்தப்பட்டு, அங்கிருந்து அண்டை நாடான பங்களாதேஷுக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒடிஸாவிலிருந்து மேற்குவங்க மாநிலத்துக்கு கடத்தப்பட்ட பசுக்களை போலீஸார் மீட்டிருக்கின்றனர். இதில் ஹைலைட் என்னவென்றால், வேன், மினி லாரி, லாரிகளில் கடத்திச் சென்றால், பிடித்து விடுவார்கள் என்று கருதி, எரிபொருள் நிரப்பும் டேங்கர் லாரிக்குள் வைத்து படுமாடுகளை கடத்திச் சென்றதுதான்.
ஒடிஸா மாநிலத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் வழியாக மேற்குவங்க மாநிலத்துக்கு பசுமாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டம் பஹரகோரா காவல் நிலைய பொறுப்பாளர் சந்தன் குமார் தலைமையிலான போலீஸார் கலியாடிங்க சவுக் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேன், மினி லாரி, லாரிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தியபோது, எந்த வாகனத்திலும் பசுமாடுகள் இல்லை. இதனால் போலீஸார் கடும் குழப்பமடைந்தனர். ஒருவேளை தகராறான தகவலாக இருக்குமோ என்று சந்தேகமடைந்தனர்.
இந்த நிலையில், எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று வந்திருக்கிறது. சந்தேகமடைந்த போலீஸார், அந்த டேங்கர் லாரியை போலீஸார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, டேங்கர் லாரிக்குள் கால்கள் மற்றும் வாய்கள் கட்டப்பட்ட நிலையில், 23 பசுமாடுகள் இருப்பது தெரியவந்தது. இதில், 2 மாடுகள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, டேங்கர் லாரி டிரைவரான ஒடிஸா மாநிலம் பத்ரக் பகுதியைச் சேர்ந்த ஷேக் மிராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மீட்கப்பட்ட பசுக்களை ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டம் சாகுலியாவில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் நடத்தப்பட்டு வரும் கால்நடை பாதுகாப்பு கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.