காலை 9.15 மணிக்கு அலுவலகம் வராவிட்டால் அரை நாள் விடுப்பாக கருதப்படும் என மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆகும். ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதும் முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து புறப்பட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதைத் தடுக்க மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததும், பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு பெரும்பாலான ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கருவியில் வருகையை பதிவு செய்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளைப் பெருவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள மத்தியஅரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும். உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கருவியில் கட்டாயம் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். காலை 9.15 மணிக்குள் வராவிட்டால் அரை நாள் தற்செயல் விடுப்பாக கருதப்படும்.
மேலும் ஏதோ ஒரு காரணத்துக்காக, ஒரு குறிப்பிட்ட நாளில்அலுவலகத்துக்கு வர முடியாவிட்டால், அதற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதுடன் தற்செயல் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஊழியர்களின் வருகை மற்றும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருகிறார்களா என துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் உயர் அதிகாரிகள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். பல நேரங்களில் மாலை நேரங்களில் 7 மணி வரை பணிபுரிய வேண்டி இருப்பதாகவும், வார விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்தும் பணிபுரிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.