ஆண்டுதோறும் பட்டாசு உற்பத்தி கிடங்குகளின் விபத்து அதிகரிக்கும் நிலையில், இதுவரை நடந்த விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்டவை குறித்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டு பெறப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 1,087 பட்டாசு ஆலைகள் உள்ளதாக கூறியுள்ள ஆட்சியர், 2,963 மொத்தம் மற்றும் சில்லறை பட்டாசு கடைகள் செயல்படுவதாக விளக்கம் அளித்தார். 2020 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரையான 50 மாதங்களில் 83 ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 4 கடைகள் எரிந்துள்ளதாகவும் கூறியுள்ள தீயணைப்புத்துறை, இந்தக் காலத்தில் 93 பேர் உடல்கருகி உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு, மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் போய் சேர்ந்துள்ளதா, விதி மீறிய எத்தனை ஆலைகள் மூடப்பட்டன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த மாவட்ட நிர்வாகம், அந்த தகவல்களை அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பணி இருப்பதாக காரணம்காட்டி ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்த அதிகாரிகள், தேர்தல் முடிந்தபின்னும் சாக்குபோக்குகளை கூறி தொழிலாளர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என சமூகஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.