செந்தில்பாலாஜி விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்யச் சொல்லி ஏன் கவர்னரை நாடினார் என்று பா.ஜ.க.வினரும், நெட்டிசன்கள் பழைய வீடியோவை எடுத்துப் போட்டு திணறடித்து வருகின்றனர்.
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்கில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். தற்போது அவரை, நீதிமன்றக் காவலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்ந்து வருகிறார்.
இதனிடையே, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து நேற்று முன்தினம் இரவு கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். ஆனால், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதோடு, இதை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, கவர்னருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையை கடித மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான், பழைய விவகாரத்தை தோண்டி எடுத்து, அப்போ மட்டும் கவர்னருக்கு அதிகாரம் இருந்தது. இப்போது இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பா.ஜ.க.வினரும், நெட்டிசன்களும். அதாவது, அ.தி.மு.க. ஆட்சியின்போது குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்போது, விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேட்டியளித்த ஸ்டாலின், ராஜானாமா செய்யாவிட்டால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் மனு கொடுத்தார்.
தற்போது இந்த விவகாரத்தைத்தான் பா.ஜ.க.வினரும், நெட்டிசன்களும் கையில் எடுத்திருக்கின்றனர். அப்போது, ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஸ்டாலினுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் தைரியம் இருந்தா… தெம்பு இருந்தா… திராணி இருந்தா என்று ஸ்டாலின் ஆவேசமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு பதிலளிக்க முடியாமல் தி.மு.க. உ.பிஸ்கள் திணறி வருகிறார்கள்.