இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று(ஜன.,26) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், குடியரசு விழாவில் பங்கேற்க வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் நரேத்திர மோடி வரவேற்று அழைத்து சென்றார். பிறகு, ராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்
இதனைத்தொடர்ந்து கர்த்வயா பாதையில் 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை குடியரசு தலைவர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பின்னர் 112 பெண்கள், கொண்ட இசைக்குழுவினர், பெண்கள் சக்தியை பறைசாற்றும்படி இசைக்கருவிகளை வாசித்தபடி அணிவகுத்து வந்தனர். பெண்கள் நாதஸ்வரம், செண்டை மேளம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி வந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.