சென்னை, கிண்டி, ஐந்து பர்லாங் சாலை- – வேளச்சேரி சாலை இணைப்பில் வாகனங்களுக்கான காஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே ஏழு மாடி அடுக்கு குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக, 40 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து கொண்டிருந்தபோது, கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து மழைநீர் வெளியேறி, சாலையில் தேங்கிய போது கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கியது. அப்போது கட்டுமான பள்ளத்தில் மணல் சரிவு ஏற்பட்டதால், அருகில் உள்ள காஸ் நிலைய அலுவலக அறை, கழிவறை ஆகியவை பள்ளத்தில் சரிந்து விழுந்தது. இதில் கட்டடத்துடன் அதிலிருந்த 4 ஊழியர்கள் பள்ளத்தில் சரிந்து விழுந்தனர். மேலும், கட்டுமான சிவில் பொறியாளர் இருந்த கண்டேய்னர் பெட்டியும் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.
ஆனால், வெள்ள நீர் அதிகரித்து வந்து, 40 அடி ஆழ பள்ளத்தை மூடியதால் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. அவர்களை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று நரேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.