நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான வரும் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில், அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என்றும், பொதுமக்கள் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இது தவறான தகவல் என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். இந்நிலையில், இந்த நிதியாண்டு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வசதியாகவும், வருமானவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கு வசதியாகவும் அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டும் வரும் 31-ம் தேதியன்று செயல்படுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மற்ற கிளைகள் அன்றைய தினம் செயல்படாது. மேலும், அன்றைய தினம் பொதுமக்களின் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இது தொடர்பாக, சமூகவலை தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.