தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 9 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சியில் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்த 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிரடியாக கைது செய்துள்ளது. இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, விவரிக்கிறது இந்த தொகுப்பு.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரன் ஹாஜி சலீம். இவனுடன், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சிலர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதையடுத்து, களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் குணா என்கிற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி அண்ணா என்ற புஷ்பராஜா ஆகியோர் தமிழகம் மற்றும் இலங்கை போதை பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டவர்கள் என்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, மொஹமத் அஸ்மின், கென்னடி பெர்னாண்டோ, லடியா, தனுக்க ரொஷான் மற்றும் திலீபன் உள்ளிட்டவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அஸ்மினைத் தவிர மற்ற அனைவருக்கும் இலங்கை முகவரிகள் உள்ளன. இதனிடையே, தி.மு.க. கவுன்சிலர் நவாஸ் மற்றும் அவரது சகோதரரிடம் இருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள போதை பொருளை அண்மையில் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
விடியல் ஆட்சியில், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருவதற்கு திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிகழ்த்திய அதிரடி சோதனையே சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.