பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. இதில் வெள்ளத்தில் சிக்கியும், மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கியும் 23 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறு.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. மேலும், கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கனமழை நீடித்துவரும் நிலையில், நரோவால் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பேர், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் உட்பட மின்னல் தாக்கி மொத்தம் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதேபோல, வெள்ளத்தில் மூழ்கி 7 பேர், மின்சாரம் தாக்கி 6 பேர் என மொத்தம் 13 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும் பலரும் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் 30-ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.