பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதை பல்வேறு ஊடகங்கள், செய்திதாள்கள், மற்றும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும். இதனை தொடர்ந்து தாகத்திற்காக மசூதியில் தண்ணீர் எடுத்த ஹிந்து சிறுவன் மற்றும் அவன் குடும்பத்தின் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் குறித்து தினமலர் இவ்வாறு செய்தி வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தானில் 75 லட்சம் ஹிந்துக்கள் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான ஹிந்துக்கள் உள்ளனர். அங்கு வாழும் முஸ்லிம்களுடன் கலாசாரம், பழக்க வழக்கங்கள், மொழி ஆகியவற்றில் இணக்கமாக வாழ்ந்தாலும், சிறுபான்மை ஹிந்துக்கள் அடிக்கடி துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
பஞ்சாப் மாகாணத்தின் ரஹீம்யார் கான் நகரில் ஆலம் ராம் பீல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் பல ஆண்டுகளாக வயல்களில் பருத்தி பறிக்கும் பணி செய்து வருகின்றனர். சமீபத்தில் வீட்டருகே உள்ள மசூதியின் குழாயில் இருந்து குடிநீர் பிடித்து வந்தனர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆலம் ராமின் குடும்பத்தினரை, ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தினர்.
இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபரின் உறவினர், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியை சேர்ந்த எம்.பி.,யின் உறவினர் என்பதால், போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
நன்றி ; தினமலர்