பாகிஸ்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழுகிய நிலையில் 200-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. தனி நாடு கேட்டு நடக்கும் இப்போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை பாகிஸ்தான் அரசு சிறையில் அடைத்தும், சுட்டுக் கொன்றும் வருகிறது. தவிர, இலங்கையில் தமிழகர்கள் காணாமல் ஆக்கப்பட்டதுபோல், பலுசிஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் பலரும் காணாமல் ஆக்கப்பட்டு வரும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்த சூழலில்தான், பாகிஸ்தானிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அழுகிய நிலையில் 200 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் நிஷ்டர் என்கிற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், ஆய்வுக்குச் சென்றார். அப்போது, மருத்துவமனையில் ஏராளமான பிணங்கள் இருப்பதாக குஜ்ஜாரிடம் ஒருவர் கூறியிருக்கிறார். இதையடுத்து, நிஷ்டர் மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்று கதவை திறக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் திறக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து, போலீஸுக்கு தகவல் கொடுக்கப்போவதாக குஜ்ஜார் கூறவே, கதவை திறந்திருக்கிறார்கள். உள்ளே சென்று பார்த்தபோது, பிணவறையின் மேல்தளத்தில் 200-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு, மருத்துவ மாணவர்களின் கல்வித் தேவைக்காக மேற்கண்ட உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், உடல்கள் பதப்படுத்தப்படாமல் அழுகிய இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து குஜ்ஜார் கூறுகையில், “50 ஆண்டுக்கால பாகிஸ்தான் வரலாற்றில் நான் இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததில்லை” என்று அதிர்ச்சியுடன் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை பஞ்சாப் அரசு நியமித்திருக்கிறது. இதனிடையே, மேற்கண்ட உடல்கள் பலுசிஸ்தானில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம், மேற்கண்ட 200 உடல்களும் உரிமை கோரப்படாத உடல்கள் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட உடல்களை கழுகுகளுக்கு போடுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.