உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவம்… பிரதமர் மோடியின் ராஜதந்திரம்: பாகிஸ்தான் நிபுணர் புகழாரம்!

உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவம்… பிரதமர் மோடியின் ராஜதந்திரம்: பாகிஸ்தான் நிபுணர் புகழாரம்!

Share it if you like it

பாரத பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் செல்வாக்கு உலகளவில் அதிகரித்து வருகிறது என்று பாகிஸ்தான் பத்திரிகை புகழ்ந்து தள்ளி இருக்கிறது.

பாரத பிரதமராக நரேந்திர மோடி 2014-ல் பதவியேற்றார். இதன் பிறகு, காங்கிரஸ் அரசில் சீர்கெட்டுப் போயிருந்த துறைகளை எல்லாம் சீரமைத்தார். மேலும், மேக் இன் இண்டியா என்கிற திட்டத்தை அமல்படுத்தி, அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க ஏற்பாடு செய்தார். மேலும், வெளியுறவுக் கொள்கையில் யாருக்கும் கட்டுப்படாமல் தனி கொள்கையை வகுத்து செயல்பட்டு வருகிறார். அதோடு, அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து எல்லா நாட்டு தலைவர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார். குறிப்பாக, 2019-ம் ஆண்டு 2-வது முறையாக மீண்டும் பிரதமரான பிறகு, கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே உலுக்கியது. இந்த சமயத்தில் நமது நாட்டில் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியை நம் நாட்டு மக்களுக்கு செலுத்தி, உயிர்களை காத்ததோடு, உலக நாடுகளுக்கும் வழங்கினார். இதனால், மோடியை உலக நாடுகள் பலவும் பாராட்டி வருகின்றன. அதோடு, தற்போது ஜி20 நாடுகளுக்கு இந்தியாதான் தலைமை வகித்து வருகிறது.

இந்த சூழலில்தான், மோடி தலைமையிலான இந்தியா உலகளவில் செல்வாக்கு பெற்று வருவதாக பாகிஸ்தான் பத்திரிகை புகழாரம் சூட்டி இருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் ஷஜாத் சவுத்ரி, அந்நாட்டில் வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகையில், “வெளியுறவுக் கொள்கையில், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தனக்கென புதிய விதியை வகுத்து செயல்பட்டு வருகிறது. தனக்கு முன்பிருந்த பிரதமர்கள் செய்ய முடியாததை, பிரதமர் மோடி செய்து உலகளவில் இந்தியாவிற்கு தனி முத்திரை பதித்து வருகிறார். முக்கியமாக, இந்தியா எதை செய்ய நினைக்கிறதோ, அதை தேவையான அளவிற்கு செய்கிறது. சர்வதேச அளவில் இந்தியா தனது செல்வாக்கு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மோடி கொண்டு சென்றிருக்கிறார். இதனால், இந்தியாவின் தடம் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இதன் காரணமாக, ஜி 7 மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்படுவதுடன், ஜி 20 அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறது. தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், பெருந்தொற்று ஆகியவற்றில் சமமான வளர்ச்சிக்கு முக்கியமானவற்றை பிரதிநிதித்துவப்படுத்த, உலகளவில் தெற்கு பகுதியை இந்தியா வழிநடத்திச் செல்கிறது.

ஆசியாவிலும், உலகளவிலும் ஒரு முக்கியமான நாடாக மாறும் வகையில், இந்தியாவின் செயல்பாடு மகத்தானதாக இருக்கிறது. இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி, கடந்த 3 தசாப்தமாக சிறப்பாக செயல்படும் சீனாவுடன் ஒத்துப் போனது. 2004-ல் இந்தியாவில் அந்நிய முதலீடு 100 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. மன்மோகன் ஆட்சியில் இது 252 பில்லியன் டாலரானது. தற்போது பிரதமர் மோடி தலைமையில் அந்நிய முதலீடு 600 பில்லியன் டாலராக உயர்ந்து, ஜி.டி.பி.யானது 3 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இந்த மகத்தான வளர்ச்சியானது, அனைத்து முதலீட்டாளர்களும் விரும்பும் நாடாக இந்தியாவை மாற்றி இருக்கிறது. பாகிஸ்தானினுக்கு மிகவும் நெருங்கிய நாடான சவுதி அரேபியாகூட, இந்தியாவில் 72 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்கிறது. ஆனால், பாகிஸ்தானில் வெறும் 7 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நாம் கெஞ்சுகிறோம். உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் இந்தியா, 2037-க்குள் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இருக்கும். அதேபோல, உலகின் 3-வது மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடாகவும் இருக்கும் இந்தியா, பல்வேறு தளங்களில் தனது கால்தடத்தை பதித்திருக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் ரீதியில் இந்தியாவிடம் ஏமாந்து விட்டது பாகிஸ்தான். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370-வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம், அது சர்ச்சைக்குரிய பகுதி என்பதையும் நீக்கி இருக்கிறது. ரஷ்யா மீது அமெரிக்கா தடை விதித்திருக்கும் நிலையில், இந்தியா தவிர வேறு எந்த நாடும் ரஷ்யாவுடன் எளிதாக வர்த்தகம் செய்ய முடியாது. இந்தியா மட்டும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதுடன், அதனை சுத்தம் செய்து ஏற்றுமதி செய்து மறைமுக வழியில் டாலராக சம்பாதிக்கும். 2 எதிரெதிர் மிலிட்டரி சூப்பர் நாடுகள் இந்தியாவின் நட்பு நாடாக இருக்கின்றன. இது மோடியின் ராஜதந்திர புரட்சி அல்லாமல் வேறு என்ன என கூற முடியும்? பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளி தற்போது மிகப்பெரியதாக மாறி இருக்கிறது. தெற்காசிய நாடுகளை மட்டும் சார்ந்து இருக்காமல் இந்தியா தனது உறவுகளை விரிவுபடுத்தி இருக்கிறது. துணிச்சலான முடிவுகளை எடுத்திருப்பதால், இந்திய மக்கள் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். இந்தியா குறித்த தனது கொள்கையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லது வரலாற்று தடத்தில் பாகிஸ்தான் சுருங்கிப் போகும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it