பாகிஸ்தான் ராணுவம் போலி என்கவுன்ட்டர்: பலுசிஸ்தான் மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் ராணுவம் போலி என்கவுன்ட்டர்: பலுசிஸ்தான் மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை!

Share it if you like it

பாகிஸ்தானில் போலி என்கவுன்ட்டர் மூலம் பலுசிஸ்தான் மக்கள் 9 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொலை செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருந்து வருகிறது பலுசிஸ்தான். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை கோரி வருகின்றனர். இதற்காக, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி போராடி வருகின்றனர். மேலும், பலுசிஸ்தான் பகுதியில் சீன ராணுவம் பட்டுப்பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் சீனா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால், பாகிஸ்தான் அரசும், ராணுவமும் பலுசிஸ்தான் மக்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை, பாகிஸ்தான் அதிகாரிகளும், ராணுவமும் கடத்திச் சென்று காணாமல் ஆக்கி வருகின்றனர். மேலும், பலரையும் கைது செய்து சித்ரவதை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி நிகழாண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்டோரை காணாமல் ஆக்கி இருக்கிறது. இவர்களில் 14 பேரை ராணுவம் சுட்டுக்கொலை செய்திருக்கும் நிலையில், 11 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பலுசிஸ்தானின் ஜியாரத் மாவட்டத்தில் 9 பேரை போலி என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்திருக்கிறது பாகிஸ்தான் ராணுவம். கடந்த மாதம் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, சில தினங்களுக்கு முன்பு ராணுவ கர்னலை கடத்தி கொலை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக, 9 பேரை சுட்டுக்கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜியாரத் மாவட்டம் ஹர்னாய் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 9 பேரை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஆனால், பலுசிஸ்தான் விடுதலை ராணுவமோ, கொல்லப்பட்ட 9 பேருக்கும் தங்கள் குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. காணாமல் போனவர்களுக்கான பிரசாரக் குழுவான பலூச் காணாமல் போன நபர்களின் குரல், மேற்கண்ட நபர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறது. 9 பேரில் ஒருவரான ஷம்ஸ் சதக்சாய், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, காவலில் வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்துக்கு பலுசிஸ்தானின் மனித உரிமைகள் கவுன்சில் (ஹக்பன் பலுசிஸ்தான்) கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக விசாரிக்க அதிகாரிகளை நியமிக்கவும் வலியுறுத்தி இருக்கிறது. பலுசிஸ்தானில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் மக்கள் பலவந்தமாக கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பலூச் மக்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் போலி என்கவுன்ட்டர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு விட்டனர். மற்றவர்கள், சித்தரவதை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.


Share it if you like it