பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ வீரர் நாயக் ஜஸ்விர் சிங் வீரமரணம் அடைந்தார். அதேசமயம், பயங்கரவாதி ஒருவன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டான்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்தும், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் எல்லைப் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதும், அதை இந்திய ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் முறியடிப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து குப்வாரா மாவட்டத்தின் தங்தார் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியிலுள்ள கரங் நார் பகுதியில் பயங்கரவாதிகள் 3 பேர் நேற்று நள்ளிரவுக்கும் இன்று அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஊடுருவ முயன்றனர். இதை கண்ட இந்திய ராணுவத்தினர் மறைந்திருந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ வீரர் நாயக் ஜஸ்விர் சிங் பலத்த குண்டுக் காயமடைந்தார். உடனடியாக அவரை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக ஸ்ரீநகர் ராணுவ பாதுகாப்பு பி.ஆர்.ஓ. தெரிவித்தார். பின்னர், இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்ற இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு, தாக்குதல் நடந்த கிராமத்தில் சோதனையிட்டபோது, ஒரு ஏ.கே. ரக துப்பாக்கி, 4 கைத்துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை ராணுவம் பறிமுதல் செய்தது.
தொடர்ந்து, வீரமரணமடைந்த ராணுவ வீரர் நாயக் ஜஸ்விர் சிங் உடலுக்கு, லெப்டினென்ட் ஜெனரல் ஏ.டி.எஸ்.அவுஜ்லா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, ஜவானின் உடல் அவரது சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குக்காக அனுப்பப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், “துக்கமாக இந்த நேரத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருடன் இந்திய ராணுவம் பக்கபலமாக இருக்கிறது. மேலும், அவர்களது கண்ணியம் மற்றும் நல்வாழ்வுக்காக உறுதியுடன் உள்ளது. இந்த துணிச்சலான வீரமகனுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மரியாதை செலுத்துவதில் தேசத்துடன் இணைகிறார்கள்” என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.