ஸ்பெயின் சகோதரிகள் பாகிஸ்தானில் கொலை!

ஸ்பெயின் சகோதரிகள் பாகிஸ்தானில் கொலை!

Share it if you like it

ஸ்பெயின் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சகோதரிகள், பாகிஸ்தானில் டார்ச்சர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜராத் மாவட்டத்திலுள்ள நாதியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் அரோஜ் அப்பாஸ் (24), அனீசா அப்பாஸ் (21). ஸ்பெயின் நாட்டின் குடியுரிமை பெற்ற சகோதரிகள் இருவரும், தங்களது தாய் அஸ்ரா பீபியுடன் அங்கேயே வசித்து வந்தார்கள். இருவரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இருவரை காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த விஷயம் பாகிஸ்தானில் இருந்த உறவினர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, இருவரையும் கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு வரவழைத்தவர்கள், உறவினர்கள் மகன்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சகோதரிகள் இருவரும் ஸ்பெயினுக்கே சென்று விட்டார்கள்.

பின்னர், அங்கு ஏற்கெனவே தாங்கள் காதலித்தவர்களை திருமணம் செய்து கொள்ள சகோதரிகள் இருவரும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எனவே, தங்களது கணவர்களிடம் இருந்து விவாகரத்து கோரியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த கணவர்கள், உறவினர் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே, உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று தங்களது மனைவிகளிடம் கூறியிருக்கிறார்கள். இதை நம்பிய சகோதரிகள் இருவரும், தங்களது தாயுடன் பாகிஸ்தான் திரும்பி இருக்கிறார்கள். திரும்பி வந்த சகோதரிகளிடம், தாங்களும் ஸ்பெயின் நாட்டுக்கு குடிபெயரும் வகையில் ஆவணங்களில் கையெழுத்திடும்படி கணவர்கள் கோரியிருக்கிறார்கள்.

இதற்கு சகோதரிகள் மறுப்புத் தெரிவித்து விட்டனர். இது தொடர்பாக, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, சகோதரிகளை தாக்கி சித்ரவதை செய்ததோடு, கழுத்தை நெறித்தும், சுட்டும், கொலை செய்திருக்கிறார்கள். இதை தடுக்க முயன்ற அச்சகோதரிகளின் தாய் அஸ்ரா பீபியை ஒரு தனி அறையில் போட்டு அடைத்து வைத்து விட்டார்கள். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட சகோதரிகளின் சகோதரர் ஷெஹ்ரியார், மாமா முஹம்மது ஹனிஃப் மற்றும் உறவினர்கள் காசித், அதிக், ஹசன், அஸ்பந்த்யார் ஆகிய 6 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. தங்கள் குடும்பத்தின் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண்கள் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், கல்லெறிந்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கில் பழங்குடிப் பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் அதிகமாக இருக்கின்றன. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின்படி, கடந்தாண்டு மட்டும் 450-க்கும் மேற்பட்ட கெளரவக் கொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it