முதல்வர் ஸ்டாலினுக்கு ஆபத்து ஏற்படும் என்று பழனி முருகன் கோயில் தலைமை குருக்கள் பேசிய ஆடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் அனைத்து கோயில்களும் புகழ்பெற்றவை என்றாலும், பழனி முருகன் கோயிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. காரணம், இங்குதான் முருகன் சிலை நவபாஷாணம் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பழனி பஞ்சாமிர்தம் மிகவும் புகழ்பெற்றது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிறது. பொதுவாக, எந்தக் கோயிலாக இருந்தாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆகவே, பழனி முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் தன்மை மற்றும் பலம் குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பொங்கலியப்பன் தலைமையில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆதீனங்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான், பழனி கோயில் மூலவர் சிலையான நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்து சாத்துவதில், அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கோயில் கும்பாபிஷேகத்துக்கான நாள் மிகவும் குறைவாக இருப்பதால், கோயில் கருவறை மற்றும் நவபாஷாண மூலவர் சிலையை பலப்படுத்தும் பணிகளை சரியாக முடிக்க முடியாது. எனவே, கும்பாபிஷேகத்தை அவசர கதியில் நடத்த வேண்டாம் என்று அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதை அதிகாரிகளும், அறங்காவலர்களும் ஒத்துக்கொள்ளவில்லை.
இதன் தொடர்ச்சியாக, அர்ச்சக ஸ்தானிக சங்கத் தலைவரும், பழனி கோயில் மூத்த அர்ச்சகருமான கும்பேஷ்வர குருக்கள், பழனி கோயில் அர்ச்சகர்களுக்கு வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த ஆடியோவில், “பழனி முருகன் கோயில் சிலையை பலப்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்தச் சொல்கிறார்கள். ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். ஆகவே, இதுதொடர்பாக திருக்கோயில் சார்பில் அர்ச்சகர்களிடம் கையெழுத்து கேட்டால், யாரும் போட வேண்டாம். மீறி கையெழுத்து போட்டு, பிரச்னைகள் வந்தால் உதவிக்கு வரமுடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 27-ம் தேதி பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். தமிழக முதல்வர் ஸ்டாலினின் நட்சத்திரமும் பூரம். பொதுவாக, நாட்டு மன்னனின் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நாளன்று எவ்வித காரியங்களையும் நடத்தக் கூடாது என்பது விதி. மீறி நடந்தினால் மன்னனுக்கு கேடாக முடியும் என்பது விதி. அதனடிப்படையில் பார்த்தால், குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டு மன்னர் என்கிற முறையில் பூரம் நட்சத்திரத்தைக் கொண்ட தமிழக முதல்வரான ஸ்டாலினுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடு ஏற்படும் என்றொரு தகவலும் உலா வருகிறது.
இதுகுறித்து பழனி அர்ச்சகஸ்தானிய சங்கத் தலைவர் கும்பேஸ்வர குருக்கள் கூறுகையில், “பழனி முருகன் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்த வேண்டாம். அப்படியே கும்பாபிஷேகத்தை நடத்துங்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இது ஆகம விதிகளை மீறிய செயல். அவ்வாறு செய்தால் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும். இதற்கு முன்பும் இதுபோல செய்து அதனால் ஏற்பட்ட விபரீதங்களை மறந்து விடக்கூடாது. மூலவரின் பாதுகாப்பு முக்கியமானது. ஏற்கெனவே மூலவர் சிலைக்கு செய்துவந்த ஆறுகால அபிஷேகங்களும் எம்.ஜி.ஆர். காலத்தில் நிறுத்தப்பட்டது. இதுபோல ஒவ்வொன்றையும் நிறுத்தினால், மூலவர் சிலை பலமில்லாமல் போகும். மருந்து சாத்தாமல் அவசரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தினால் நாடு சுபிட்சமின்றி போகும்” என்றார்.