பழநி கோயிலுக்குச் சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை 12 வாரங்களுக்குள் மீட்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கோவை மாவட்டம் உடுமலை தாலுகா மெய்வாடி கிராமத்தில் உள்ள 6.5 ஏக்கர் நிலம், பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்டது. இது பழநி கோயிலுக்குச் சொந்தமான நிலம்தான் என்பதை 1973-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. ஆனால், இந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்று சொல்லி, சிலர் உடுமலைப்பேட்டை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், மனுதாரர்களுக்கு சாதகமாக உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி, மனுதாரர்கள் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிவில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மறைத்து, சிவில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருப்பதாகவும், மோசடி செய்து பெற்ற இந்த உத்தரவு செல்லாது என்றும் கூறப்பட்டது. ஆனால், கோயில் நிர்வாகத்தின் இந்த மனுவை சிவில் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆகவே, இதை எதிர்த்து பழநி கோயில் நிர்வாக அதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டாக்காராமன், “நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மறைத்து, தாங்கள்தான் நிலத்தின் உரிமையாளர்கள் என்று சொல்லி சிலர் வழக்குத் தொடுத்து, தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். மேலும், சிவில் நீதிமன்றத்தை மோசடி செய்து இந்த உத்தரவு பெறப்பட்டிருக்கிறது. அந்த நிலம், பழநி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமானது என்பது, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, மோசடியாக பெறப்பட்ட தீர்ப்பை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. எனவே, உடுமலை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த சொத்தை 12 வாரங்களில் கோயில் வசம் எடுக்க வேண்டும். சொத்து மீட்பதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறை கமிஷனர், செயலர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.
இதேபோல, தமிழகம் முழுவதும் ஹிந்து கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்கள், பலரது ஆக்கிரமிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.