திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில், கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “139 ஆக்கிரமிப்பாளர்கள் பழனி கோயில் அடிவாரத்தைச் சுற்றி, கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கியவுடன், ஆக்கிரமிப்பு நிலங்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்று இடத்திற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள், தங்கள் பெயரில் மாற்று இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும். அப்போது தான் மாற்று இடத்திற்குச் செல்ல சம்மதிப்போம், கையொப்பமிடுவோம் எனக் கூறி மறுக்கின்றனர். எனவே, கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதமாகிறது” என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், பழனி கோயிலைச் சுற்றி, கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள 139 ஆக்கிரமிப்பாளர்களிடம், மாற்று இடம் செல்ல சம்மதம் தெரிவித்து கையொப்பம் இடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்.
மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்க வேண்டும். அதன்பின் ஆக்கிரமிப்பாளர்களை, தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தாசில்தார் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.