பழனி மலைக் கோயிலில் 82 வயது முதியவருக்கு இழுவை ரயிலில் பயணிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் அடிவாரம் வரை தவழ்ந்தே வந்த அவலம் அரங்கேறி இருக்கிறது.
பழனி மலைக் கோயிலுக்கு சிறுவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்ள் உள்ளிட்டோர் எளிதாகவும், விரைவாகவும் சென்றுவரும் வகையில், அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் வரை மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இது பக்தர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த சேவை பல்வேறு சந்தர்ப்பங்களில் மறுக்கப்படுவதுதான் பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி.யொரு சம்பவம் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 82 வயதான முருக பக்தரான முதியவர் ஒருவர் பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார். காலையில் மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக, அதே மின் இழுவை ரயிலில் ஏற முயன்றார். ஆனால், அங்கிருந்த அறநிலையத்துறை ஊழியர்கள் அவரை ஏற்ற மறுத்து விட்டனர். தன்னால் படி வழியாக இறங்கிச் செல்ல முடியாது என்று அந்த முதியவர் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இதனால் அந்த முதியவர் படி வழியாகவே தனது 2 கைகளையும் கீழே ஊன்றி தவழ்ந்தபடியே இறங்கி வந்தார். இதை அங்கிருந்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதைப் பார்த்த பலரும் முதியவருக்கு இரக்கப்பட்டும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அராஜகத்தை கண்டித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பழனி கோயிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுவர்களுக்காகத்தான் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகின்றன. ஆனால், இவை பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே சேவை வழங்குகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோரிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்கிற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.