ராமர் கெட்டவன், ராவணன் நல்லவர் என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரின் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரியும் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பக்வாராவில் அமைந்திருக்கிறது லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் அசோக் குமார் மிட்டல். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் அக்கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணிபுரிபவர் குர்சங் ப்ரீத் கவுர். இவர் பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. அந்த ஆடியோவில்தான் ராமன் கெட்டவன் என்றும் ராவணன் நல்லவன் என்றும் குர்சங் ப்ரீத் கூறியிருக்கிறார்.
அந்த ஆடியோவில் குர்சங் ப்ரீத் கவுர் பேசியிருப்பது இதுதான்… “ராவணன் மனதளவில் மிகவும் நல்லவன். ராமர் நல்லவர் இல்லை. ராமரை ஒரு தந்திரமான நபராக நான் காண்கிறேன். சீதையை சிக்க வைக்க ராமன் திட்டம் தீட்டினான். நினைத்தபடியே சீதையை பிரச்னையில் சிக்க வைத்து ராவணன் மீது எல்லா பழிகளையும் போட்டான். இதில், யார் நல்லவர், யார் தீயவர் என்று எப்படி முடிவு செய்வது? ஆனால், உலகமே ராமரை நல்லவர் என்று கூறி வணங்கி வருவதோடு, ராவணனை கெட்டவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில், எல்லாத் திட்டமிடலும் ராமனாலேயே செய்யப்பட்டிருக்கும்போது, அவர் எப்படி இவ்வளவு நல்லவராக இருக்க முடியும்? ராமர் தந்திரமானவர்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோதான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி (எல்.பி.யு.) உதவி பேராசிரியை குர்சங் ப்ரீத் கவுரை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவால் சிலர் புண்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அந்த ஆடியோவில் எங்கள் ஆசிரியர் ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரால் பகிரப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் தனிப்பட்டவை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அவற்றில் எதையும் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை. மேலும், லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி ஒரு மதச்சார்பற்ற கல்வி நிறுவனம். நாங்கள் எப்போதும் ஒரு மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக இருந்து வருகிறோம், இங்கு அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகளை சேர்ந்தவர்கள் அன்புடனும், மரியாதையுடனும் சமமாக நடத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.
பொதுவாக, தமிழகத்தில்தான் ஹிந்துக்களும், ஹிந்து தெய்வங்களும் ஹிந்து மத விரோதிகளால் நிந்திக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இது வெளிமாநிலங்களுக்கும் பரவி இருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. ஜோதிமணி, ராமர் யார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்கும் ராமரைத் தெரியாது. தமிழ்நாட்டில் ராமர் கோயிலே இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, களத்தில் குதித்த யூடியூப்பர்கள் சிலர், தமிழகம் முழுவதும் ராமரின் போட்டோவை காட்டி, இது யார் தெரிகிறதா என்று கேட்டார்கள். அதற்கு எல்லோருமே இது கடவுள் ராமர் என்று கூறினார்கள். மேலும், ஜோதிமணி போட்டோவைக் காட்டி யார் என்று கேட்டதற்கு யார் என்று தெரியாது என்று கூறினார்கள். இந்த வீடியோ வெளியாகி ஜோதிமணி முகத்தில் கரியை பூசி இருக்கிறது. இந்த சூழலில், பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு பேராசிரியை ராமரை இழிவாகப் பேசியிருக்கிறார்.