மக்களவையில் பஞ்சாப் முதல்வர் மீது அகாலி தள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பகீர் குற்றச்சாட்டினை சுமத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இருந்து வருகிறார். இவர், எப்போதும் மதுபோதையில் இருக்க கூடியவர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் 11-ம் தேதி ஜெர்மனி நாட்டிற்குச் சென்று இருந்தார். அங்கு முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். இந்த சூழலில், டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் தேசியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில், கலந்துகொள்வதற்காக பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ஜெர்மனியிலிருந்து லுப்தான்ஸா விமானத்திற்கு புறப்பட்டார். ஆனால், அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால், நிற்கக்கூட முடியாமல் தள்ளாடியதாகவும், சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாக அவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, விமானமும் 4 மணி நேரம் தாமதமாகச் சென்றதாக அந்நாட்களில் பரபரப்பாக பேசப்பட்டன. இப்படியாக, பஞ்சாப் முதல்வரின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், சிரோன்மணி அகாலி தள கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் மக்களவையில் இவ்வாறு பேசினார் ;
இப்போது பஞ்சாப் முதல்வராக இருப்பவர், சில மாதங்களுக்கு முன்பு, காலை 11 மணிக்கே குடித்து விட்டு வந்து மக்களவையில் ஓரமாக உட்கார்ந்திருந்தவர். அவருக்கு, அருகே இருந்த எம்.பிக்கள், தங்களை வேறு இருக்கைக்கு மாற்றுமாறு கோரினர். பொதுவாக குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று எச்சரிப்பார்கள். ஆனால், ஒருவர் குடித்து விட்டு, மாநிலத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் நிலையே இப்படி என்றால் மாநிலத்தின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.