நாம் இன்று சுதந்திர காற்றை, உற்சாகமாக சுவாசித்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த சுதந்திரத்தை பெறுவதற்காக, நம்முடைய வீரர்கள் பட்ட பாடு, மிகவும் கொடுமையானது. அவர்கள் அனுபவித்த துயரங்கள், எத்தனை எத்தனை..
சுதந்திரம் பெற பல்வேறு வழிகளில், பல போராட்டங்கள் நடைபெற்றன. அவை
- அமைதியான அறவழியிலும்,
- ரத்தத்திற்கு ரத்தம் என்ற வீர வழியிலும்,
- இயல், இசை, நாடகம் என்ற கலை வழியிலும்,
- மேடைகளில் கம்பீர பேச்சுகளின் மூலமாகவும்,
- பத்திரிக்கைகளில் தங்களுடைய உணர்வுபூர்வ எழுத்துக்களின் வழியிலும், சுதந்திரத்தை பெறுவதற்கு அரும்பாடு பட்டார்கள்.
இவர்களின் வழி வேறாக இருந்தாலும், இவர்களின் நோக்கம் ஒன்று தான், அது, நம்முடைய பாரத மாதவின் கைகளிலுள்ள அடிமை சங்கிலியை, சுக்கு நூறாக உடைத்தெறிப்பது தான், இவர்களின் இலட்சியமாக இருந்தது.
சுதந்திர தாகத்தையும், சுதந்திர வேட்கையும் வெறி கொண்டு, தன்னுடைய வீர உணர்வு பூர்வமான எழுத்துக்களின் மூலமாக, மக்களின் சுதந்திர எழுச்சியை தட்டி எழுப்பச் செய்த, ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரர், திரு பரலி சு. நெல்லையப்பர் ஆவார்.
பரலி. சு. நெல்லையப்பரின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்
பிறப்பு:
1889ஆம் ஆண்டு, செப்டம்பர் 18 ஆம் தேதி, தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள, பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில், சுப்பிரமணி பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் என்னும் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். நெல்லையப்பரின் உடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேரும், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆவார். நெல்லையப்பர் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர். வ.உ.சி.க்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர், என்னும் பன்முகம் கொண்டவர்.
கல்வித் திறன்:
நெல்லையப்பர், மெட்ரிக்குலேஷன் வரை, பள்ளியில் படித்தவர். அதற்கு பிறகு, தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907 ஆம் ஆண்டு, பள்ளிப் படிப்பை முடித்த, சில நாட்களிலேயே, தூத்துக்குடியில் வ.உ.சி. நடத்திய சுதேசி கப்பல் கம்பெனியில், கணக்கராகப் பணியாற்றினார்.
பாரதியின் மீது கொண்ட அன்பு, மராட்டிய மாநிலத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு, வ.உ.சி.யை அழைத்து செல்ல, சுப்பிரமணி பாரதியார் வ.உ.சி.யின் வீட்டிற்கு வந்தார். அங்கு தான் முதன் முறையாக, பாரதியாரை நேரில் பார்த்து, அவருடைய கவிதைகளை படித்து, பாரதியின் மீது மிகுந்த அன்பு கொண்டார்.
விடுதலைப் போரில் பங்கேற்பு:
வ.உ.சி., சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, நீலகண்ட பிரம்மச்சாரி, அரவிந்தர், வ.வே.சு. ஐயர் முதலிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரோடு தொடர்ந்து பழகி, நெல்லையப்பர் தன்னையும் விடுதலைப் பேராட்டங்கள் பலவற்றில் ஈடுபடுத்திக் கொண்டார். அவற்றுள் சில:
ஆங்கிலேயர்களின் வீடுகளில் வேலை பார்த்த துணி வெளுப்பாளர்கள், வேலையாட்கள், சமையற்காரர்கள் போன்றவர்களை திரட்டி, வேலை நிறுத்த போராட்டம் நடத்திய வ.உ.சி.க்கு, நெல்லையப்பர் பெரிதும் உதவியாக இருந்தார்.
விபின் சந்திரபாலை, ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக, காவல்துறையினரின் தடையை மீறி, வ.உ.சி. தூத்துக்குடியில் சுப்பிரமணி சிவாவோடு இணைந்து, மார்ச் 9 ஆம் தேதி, ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில், நெல்லையப்பரும் கலந்துக் கொண்டார்.
கப்பல் கம்பெனி நடத்தியது போன்ற பல்வேறு போராட்டங்களுக்கு, ஆங்கில அரசு, வ.உ.சி. மற்றும் சிவா ஆகிய இருவரையும், மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து கூட்டம் ஒன்றை நடத்துவதற்காக, துண்டு சீட்டு அச்சிட்டு வெளியிட்டார். இதற்காக இவரை, ஆங்கில அரசு கைது செய்து, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது.
1930ல் மறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். இதனால், இவறை ஆறு திங்கள் சிறை தண்டனை பெற்றார்.
1932ல் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று, சென்னை சிந்தாதரிப்பேட்டையில், கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிக்கடை முன்பு ஆரப்பாட்டம் போன்ற போராட்டத்தை, தலைமையேற்று நடத்தினார்.
1941ல், தனிநபர் சத்தியாகிரகம் என்னும் தனியாள் அறப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், பெல்லாரி சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறையில் இருந்த வ.உ.சி. மற்றும் சிவாவை விடுதலை செய்ய, பல வழிகளில் போராடினார்.
வ.உசி.யின் கட்டளைக்கேற்ப, நெல்லையப்பர் கோயம்பத்தூர் சென்று, வழக்கறிஞர் சி.கே. சுப்பிரமணி முதலியார் உதவியோடு, கோவை பேரூர் சாலையில், ஆசிரமம் ஒன்றை அமைத்து தங்கினார். அவ்வப்பொழுது சிறைக்குச் சென்று, வ.உ.சி.யை சந்தித்து, அவரின் கட்டளைகளை, ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார்.
வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின், சென்னை சிந்தாதரிப்பேட்டையில், குடியேறினார். நெல்லையப்பர், வ.உ.சியை சந்திக்க வந்து, அவரும் சென்னையிலே உள்ள குரோம்பேட்டையில், இறுதி காலம் வரை தங்கினார்.
தான் வாழந்த பகுதிக்கு, “பாரதிபுரம்” எனப் பெயர் சூட்டினார்
நூலின் படைப்பு:
வ.உ.சி.க்கும், சிவாவுக்கும் இரட்டை வாழ்நாள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டன. இதனை எதிர்த்து, நெல்லையப்பர் கட்டுரையொன்று எழுதினார். அது, பாரதியார் நடத்திய “இந்தியா” இதழில் வெளியிடப்பட்டது. இதுவே, இவரின் முதல் படைப்பு.
சூர்யோதயம் கிழமை இதழிலும், கர்மயோகி மாத இதழிலும் துணை ஆசிரியராக இருந்தார்.
சென்னையிலிருந்து, கோ. வடிவேலு செட்டியர் வெளியிட்ட லோகோபகாரி இதழில், துணை ஆசிரியாராக 1917-18 ஆம் ஆண்டுகளில் இருந்தார்.
“பாரதி” என்னும் இதழை, தெ.பொ.கிருட்டிணசாமி பாவலர் என்பவருடன் இணைந்து நடத்தினார்.
1921ல், தேசபக்தன் இதழில், திரு.வி.க. ,வ.வே.சு ஐயர் ஆசிரியராக இருந்த போது, துணை ஆசிரியராக பணி புரிந்தார்.
1922ல், லோகோபகாரி இதழை விலைக்கு வாங்கி, 1948 ஆம் ஆண்டு வரை, ஆசிரியராக இருந்தார்.
பாரதியாரால், தம்பி என அழைக்கப்பட்ட நெல்லையப்பர், பாரதியின் மறைவுக்கு பின், அவரின் புகழை, தனது லோகோபகாரி இதழில், பாரதி போட்டிகளும், செப்டம்பர் 11ஆம் நாள் பாரதி விழாவையும், ஆண்டு தோறும் நடத்தினார்.
1917ல் பாரதியின் கவிதைகளை, பதிப்பித்தார். 1923ல் நண்பர்களுடன் சேர்ந்து, பாரதி பிரசுரலயம் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் வழியாக ,பாரதியின் கவிதைகளை வெளியிட்டார்.
50 ஆண்டுகள், தான் எழுதிய கவிதைகளை, 142 பக்கங்களில் நெல்லை தென்றல் என்னும் நூலாக, 1966ல் வெளியிட்டார். பாரி என்னும் புனைப் பெயரில் கட்டுரைகள், தலையங்கம், மதிப்புரைகள் என பலவற்றை எழுதினார்.
நூல்கள்:
கைக்குத்தல், அரசியின் மகத்துவம், பாரதியின் தமிழ்ப் புலமை, கங்கை கொண்ட சோழபுரம், குழந்தைகள் அதிகம் பெற வேண்டா, தமிழனின் பெருமை, பாரதியார், வ.உ.சி. ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, 1944ல் சக்தி காரியாலய வெளியீடு என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார்.
பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நூல்கள், காந்தியடிகளின் சுயராஜ்யம் போன்ற பல நூல்களை, மொழி பெயர்த்து தன்னுடைய இதழில் வெளியிட்டார்.
இவ்வாறாக, தன்னுடைய புரட்சிகரமான எழுத்துக்களின் மூலமாக, மக்களின் சுதந்திர உணர்வை, வெளிக்கொணர செய்த பெருமைக்குரிய சுதந்திர போராட்ட வீரர், பரலி சு. நெல்லையப்பர். 1971ல் மார்ச் 28ஆம் தேதி பாரத மாதாவின் பொற்பாதத்தை அடைந்தார்.
K. துர்கா தேவி
Thanks for the history.Please send such historical events further.Thank you.