நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வீரமரணமடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி, காரில் வந்த 9 தீவிரவாதிகள், பலத்த பாதுகாப்பையும் மீறி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். இதைக்கண்ட பாதுகாப்புப் படை வீரர்களும், நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸாரும், தீவிரவாதிகளைத் தடுத்த நிறுத்த முயன்றனர்.
அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்கள், டெல்லி போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் டெல்லி போலீஸார் என 14 பேர் வீரமரணமடைந்தனர். இத்தாக்குதல் நடந்தபோது, 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குள் இருந்தனர்.
இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து 22 வருடங்களாகிறது. இதையொட்டி, வீரமரணமடைந்த வீரர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.