காத்திருப்பு அறையும் கழிவறையும் திறக்கப்படாததால் நோயாளிகள் அவதி : அரசு மருத்துவமனையில் அவலம் !

காத்திருப்பு அறையும் கழிவறையும் திறக்கப்படாததால் நோயாளிகள் அவதி : அரசு மருத்துவமனையில் அவலம் !

Share it if you like it

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுபள்ளி என்ற இடத்தில் புதிதாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் காத்திருக்க வசதியாக ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக காத்திருப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அதேபோல் பொது சுகாதார வளாகமும் கழிப்பிடமும் இங்கே கட்டப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பொதுமக்கள் காத்திருப்பு அறை இதுவரை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கழிப்பிடமும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. மாறாக மருத்துவமனையின் குப்பைக் கழிவுகள் பயன்பாடற்ற அட்டை பெட்டிகள் இரு அறைகளிலும் குவிந்து கிடக்கிறது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஓய்வெடுக்க அமர போதிய இடம் இல்லாததால் மருத்துவமனையின் நுழைவு வாயில் அல்லது இருசக்கர வாகன நிறுத்தங்கள் மற்றும் நடைபாதை தரையில் அமர்கின்றனர். அதேபோல் பொது கழிப்பிட வசதி இல்லாததால், நீண்ட தூரம் நடந்து சென்று திறந்தவெளியில் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே கழிப்பிடம் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு செலவில் கட்டப்பட்டுள்ள இந்த இரு கட்டடங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, காத்திருப்பு அறை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *