ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை (ஜூன் 12) முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வென்றன. சந்திரபாபு நாயுடு நாளை (ஜூன் 12) முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் ஜனசேனா, பா.ஜ.கவுக்கும் கணிசமான இடங்களை ஒதுக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ஜனசேனா கட்சிக்கு 4, பா.ஜ.க வுக்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்று (ஜூன் 11) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. நாளை காலை 11:27 மணிக்கு விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கேசரபள்ளி ஐ.டி மையம் அருகே நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதல்வராக சந்திரபாபு நாயுடு, துணை முதல்வராக பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.