தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் எதிரே 2,000 சதுர அடியில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு, மார்ச் 25-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த இடத்துக்கு இண்டியா கூட்டணி கட்சியினர் சென்று தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், நேற்று திடீரென அந்த தேர்தல் பணிமனை அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இந்த தேர்தல் பணிமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். இது, திமுக வேட்பாளர் ச.முரசொலியின் தேர்தல் செலவுக் கணக்கில் சேரும் என்பதால் தேர்தல் பணிமனை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது’’ என்றனர்.
ஆனால், வேட்பாளரின் ராசிப்படி வாஸ்து சரியில்லாமல் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாகவும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறாமல் திறக்கப்பட்டதால் பிரச்சினை ஏதேனும் நேரிடலாம் என்பதால் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.