தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவையடுத்து, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் வேதனை தெரிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானதை அடுத்து, அவரது உடல் கோயம் பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். நேரம் போக போக தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
தலைமையகத்தின் வாயிலில் இருந்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் விஜயகாந்தின் உடல் தலைமையகத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் வரும் வழியில் கொண்டு வரப்பட்டது. அதுவரை கட்டுக்குள் இருந்த தொண்டர்கள், முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது போலீஸாருக்கு மிகுந்த சவாலாகவே இருந்தது. தொடர்ச்சியாக பலமுறை தள்ளு முள்ளு ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வழியிலும் தொண்டர்கள் நுழைய முயன்றபோதும் போலீஸார் கட்டுப்படுத்தினர்.
தொண்டர்கள் முண்டியடிப்பதும், போலீஸார் கட்டுப்படுத்துவதும் என இரவு வரை இதே நிலை நீடித்தது. மிகப்பெரிய தலைவருக்கு குறுகிய இடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர். மேலும், ஆண்களுக்கு இணையான அளவில் அஞ்சலி செலுத்த குவிந்த பெண்களும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
அதே நேரம், இறுதியாக தங்களது கேப்டனை அருகில் பார்க்க முடியவில்லை எனவும் தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர். மக்கள் சிரமப்பட்டு அஞ்சலி இது தொடர்பாக அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் தேமுதிக அலுவலகத்துக்கு வெளியே நிற்கிறார்கள். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சிரமப்பட்டு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு கைக்கூப்பி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக ராஜாஜி அரங்கத்தில் விஜயகாந்த் உடலை வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தையொட்டி உள்ள 2 மேம்பாலங்களின் மீது ஏறி நின்று பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேமுதிக அலுவலகத்துக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், உள்ளே நுழைந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் சில தொண்டர்கள் சுவர் ஏறிக் குதித்து கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.