காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று பீகாரில் உள்ள கதிஹாரில் இருந்து தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மீண்டும் தொடங்கினார். இதனை தொடர்ந்து டிஎஸ் கல்லூரி சௌக் அருகே அவரைச் சந்திப்பதற்காக இளம் கட்சித் தொண்டர்கள் ஒரு மேடையை அலங்கரித்து ஆவலுடன் காத்திருந்ததனர். இளைஞர் ஆர்வலர்களான இசார் அலி மற்றும் நிக்கு உட்பட பல ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் அவரை மேடையில் இருந்து மைக்ரோஃபோன் மூலம் திரும்பத் திரும்ப அழைத்தனர். ஆனால், இதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்காததால், காங்கிரஸ் தொண்டர்கள் கோபமடைந்தனர்.மேலும் யாத்திரையை தொடர்ந்த ராகுல் காந்தி, ஷாஹீத் சவுக்கில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ராகுல் காந்தி மேடையில் சென்று மக்களுடன் பேச மறுத்துவிட்டதால், அவர்களை மேலும் கோபப்படுத்தியது, அதன் பிறகு பல காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து ராகுல் காந்தியின் நடத்தையில் அதிருப்தியை காரணம் காட்டி கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர்.
“ராகுல்காந்தியின் வருகையை எதிர்பார்த்து நாங்கள் அனைவரும் இரவு முழுவதும் விழித்திருந்தோம். அவரைப் பார்க்க மட்டும் இரவும் பகலும் உழைத்தோம். அவரை பார்க்க முடியாமல் ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள், ஆனால் அப்பெண்ணை திரும்பி கூட பார்க்கவில்லை. கட்சித் தொண்டர்களை கண்ணியமாக நடத்தாவிட்டால், நாடு எப்படி ஒன்று சேரும்,” என்று காங்கிரஸ் உறுப்பினர் நிக்கு சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மேலும் NGO (அரசு சாரா நிறுவனம்) பணியாளர்கள் சிலர் காலை 7 மணி முதல் 10 மணி வரை, ராகுல் காந்தி வருவார், அவரைச் சந்தித்து உரையாடுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி அவர்களை ஒருமுறை கூட சந்திக்கவில்லை, ”என்று முன்னி என்ற பெண் ஆவேசமாக கூறினார். “வார்டு கமிஷனர் உட்பட நாங்கள் அனைவரும் அவருக்காக பலகைகளுடன் காத்திருந்தோம். அவர் இங்கே கடந்து சென்றார் ஆனால் எங்களுடன் பேசவில்லை. அவர் மீது எங்களுக்கு கோபம். அவர் பெண்களுக்காக நிறைய செய்வதாக கூறுகிறார், ஆனால் அவர் சரியாக என்ன சாதித்தார், ”என்று அவர் கேட்டார்.