குன்னம் தொகுதிக்குட்பட்ட வாளரக்குறிச்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இதே ஊரைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் செந்துறை பா.ஜ.க. தெற்கு ஒன்றியச் செயலராக இருக்கிறார். இவரது மூத்த மகளுக்கு கடந்த 8-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்தி இருக்கிறார்கள். அப்போது அவரது உறவினர்கள் சிலர் பட்டாசு வெடித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அதே கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரும், பாலயக்குடி ஊராட்சி செயலாளரும், வளரக்குறிச்சி தி.மு..க. கிளைச் செயலாளருமான கண்ணன், பஞ்சாயத்தை கூட்டி மன்னிப்புக் கேட்கும்படி கூறியிருக்கிறார்.
அன்பரசன் தரப்பினரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஆனால், மறுநாள் அன்பரசன் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தபோது, தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து கண்ணன் வழிமறித்திருக்கிறார். அப்போது, பட்டாசு வெடித்தது குறித்து கேள்வி எழுப்பியதோடு, மிகவும் தரக்குறைவாகவும் திட்டி இருக்கிறார். அன்பரசன் மீண்டும் மன்னிப்பு கேட்டும் விடாமல், இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணைக்கு வரும்படி போலீஸார் அழைத்த நிலையில், ஸ்டேஷனுக்குச் சென்ற அன்பரசனையும், அவரது தம்பியையும் ஸ்டேஷன் வாசலில் வைத்து காலில் விழச் சொல்லி மிரட்டி இருக்கிறார்.
அனைவர் முன்னிலையிலும் அன்பரசனும், அவரது தம்பியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். இதனால் மனமுடைந்த அன்பரசன், மறுநாள் அரியலூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லாவை சந்தித்து புகார் அளித்தார். இதனடிப்படையில் கண்ணன் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு செய்தனர். இதையறிந்த கண்ணன் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர், இச்சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். முதலில் சமூக நீதியை உங்கள் கட்சியினருக்கு கற்றுக்கொடுங்கள் என்று கடுமையாக சாடி இருக்கிறார்.
இதுகுறித்த அண்ணாமலையின் அறிக்கையில், “குன்னம் தொகுதிக்குட்பட்ட செந்துறை பா.ஜ.க. தெற்கு ஒன்றியச் செயலாளர், பட்டியல் பிரிவைச் சேர்ந்த அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததாகக் கூறி, வாளரக்குறிச்சி தி.மு.க. கிளைச் செயலாளர் கண்ணன் என்பவரும், அவருடன் இருந்தவர்களும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்து அவமானப்படுத்தி உள்ளனர். சமூக நீதி என்று வேஷமிட்டுத் திரியும் தி.மு.க.வின் அமைச்சர் ஒருவரின் சொந்தத் தொகுதியிலேயே, இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது. தி.மு.க. கிளைச் செயலாளர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும், தலைமறைவு என்று காரணம் சொல்லிக் கொண்டு இருக்காமல், உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சமூக நீதி என்று மேடைகளில் வெறும் உதட்டளவில் பேசிக் கொண்டு இருக்காமல், தங்கள் கட்சியினருக்கு முதலில் சமூக நீதி குறித்துக் கற்றுத் தர வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உண்மையான சமூக நீதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.