தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சென்னை மணலி அருகே உள்ள புதுநகரில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவ மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்களிடம் கேட்கையில், ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை, பள்ளியில் உட்காருவதற்கு இருக்கைகள் இல்லை, கழிவறை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின்விசிறி வசதி இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர். மாணவ மாணவிகளோடு சேர்ந்து பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததும் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகிவிட்ட சூழலில், இதுவரை சீருடைகள், காலணி போன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில், 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளதாக என்கிற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில் குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதாக தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம், பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதையே பெற்றோர்கள் விரும்புகின்றனர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் வயல் வெளியில் தாய் தந்தையரோடு வேலை செய்து கஷ்டப்பட்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு பள்ளி கூடம் கட்டி தந்து அவர்களுக்கு உணவும் அளித்து பள்ளிக்கு வரவழைத்தார். ஆனால் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் காமராசர் அவர்கள் கட்டிய பள்ளிக்கூடமே ஓடுகள் உடைந்து சுவர்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
மேலும் அரசு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களை அரசு பள்ளிக்கூடங்களின் பரிதாப நிலையை கண்டு அரசு பள்ளியிலிருந்து வெளியேறி தனியார் பள்ளிக்கு படையெடுக்கின்றனர்.