மத்திய அரசின் கலால் வரியை விட தமிழக அரசின் வாட் வரி அதிகமாக இருப்பதால்தான் பெட்ரோல், டீசல் விலை எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டதால், பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக உயர்த்தின. இதன் காரணமாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் பெட்ரோலியப் பொருட்கள் விலை உச்சத்தைத் தொட்டது. இதையடுத்து, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.
இதன் பிறகு, பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வரும் நிலையில், கடந்த மாதம் ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால், எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோலிய பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்தியது. இதனால், பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடர்ந்து, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை மத்திய நேற்று முன்தினம் மீண்டும் குறைத்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 2.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
அதேசமயம், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தது போல மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மட்டும் வாட் வரியை குறைத்தன. இதனால், அம்மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் சென்று விட்டன. ஆனால், தமிழக அரசு வாட் வரியை குறைக்காததோடு, மத்திய அரசு மீது பழிபோட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை விட, மாநில அரசு வசூலிக்கும் வாட் வரிதான் அதிகமாக இருக்கிறது.
அதாவது, பெட்ரோலுக்கு மத்திய அரசின் கலால் வரி ரூ.19.90 பைசா மட்டுமே. இதே தமிழக அரசின் வாட் வரி ரூ.21.56 பைசா. இதேபோல, டீசலுக்கு மத்திய அரசின் கலால் வரி ரூ.15.80 பைசா மட்டுமே. இதே தமிழக அரசின் வாட் வரி ரூ.17.76 பைசா. இதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மட்டுமல்லாது, பல்வேறு அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் சுட்டிக்காட்டி இருக்கின்றன. எனினும், வாட் வரியை குறைக்க முடியாது என்று தமிழக தி.மு.க. அரசு அடம் பிடித்து வருகிறது. ஆகவே, தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.