பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைக் காட்டிலும் மற்ற மாநிலங்களில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது என்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அதிரடியாகக் கூறி, திராவிட மாடல் ஆட்சிக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, உலகம் முழுவதுமே கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. இதனால், பெட்ரோலியப் பொருட்களின் விலையும் கூடியிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை சற்றே உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, குஜராத், கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவாகத்தான் இருக்கிறது. அதேசமயம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், அம்மாநில அரசுகள் வரியை குறைக்க முன்வராததுதான்.
ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுபோல, தாங்கள் வரிக்குறைப்பு செய்யாமல் இருந்து விட்டு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று பா.ஜ.க. மீது அபாண்டமாக பழி போட்டு வருகின்றனர். இப்படித்தான் தமிழகத்தை ஆளும் தி.மு.க.வும் பெட்ரோலியப் பொருட்களுக்கு வரிக் குறைப்பு செய்யாமல், மத்திய பா.ஜ.க. அரசு பழிபோட்டு வருகிறது. ஆனால், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பதுபோல, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என்கிற விஷயம் பொதுவெளியில் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில்தான், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசு வரிக் குறைப்பு செய்யாததுதான் காரணம் என்று தெரிவித்திருக்கும் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன், 21 நாள் தி.மு.க.வுக்கு கெடுவும் விதித்திருக்கிறது. அதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னை மதுரவாயலில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகப்பா, “பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல், டிசல் விலை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இது எப்படி?” என்று கேள்வி எழுப்பியவர், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை 21-ம் தேதிக்குள் தமிழக அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கெடு விதித்திருக்கிறார். இதனால், தமிழக அரசுக்கு பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்!