பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் (பி.எஃப்.ஐ.) வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாக அமலாக்க இயக்குநரகம் (இ.டி.) தெரிவித்திருக்கிறது. மேலும், பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடர்புடை.ய ரிஹாப் இந்தியா அறக்கட்டளை ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, 1993-ம் ஆண்டு கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மூலம் தேசிய அபிவிருத்தி முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பும், வேறு சில இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து 2006-ம் ஆண்டு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பு தற்போது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் பல்வேறு தேச விரோத நடவடிக்கைகளிலும், லோக்கலில் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். ஆகவே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், 2014-ம் ஆண்டிலிருந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பல்வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அமைப்பை சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நிதியுதவி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ரவூப் செரீப் கைது செய்யப்பட்டார். இவரது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
அதோடு, அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த அமைப்பின் பல்வேறு கணக்குகளில் கணக்கில் வராத 100 கோடிக்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியது. இந்தியாவில் நடந்த சி.ஏ.ஏ. போராட்டங்கள், டெல்லி கலவரம் ஆகியவற்றில் இந்த அமைப்பிற்கு தொடர்புஇருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதேபோல, கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் போராட்டத்திற்கும் இந்த அமைப்பின் மாணவர் பிரிவுதான் காரணம் என்று கர்நாடக பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர். மேலும், ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்டதும் பி.எஃப்.ஐ. அமைப்பினர்தான் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த சூழலில், கடந்த மாத தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரகம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தலைவர்களான அப்துல் ரசாக் பீடியக்கல் என்ற அப்துல் ரசாக் மற்றும் அஷ்ரப் காதிர் என்ற அஷ்ரப் ஆகியோருக்கு எதிராக 22 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்தது. இருவரும் கேரளாவைச் சேர்ந்த பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்படி குற்றப்பத்திரிகையில் இருவரும் இணைந்து கேரளாவின் மூணாறில் ஒரு வணிகத்தை தொடங்கி, வெளிநாடுகளில் இருந்து வாங்கிய பணத்தை வெள்ளையாக்கி பி.எஃப்.ஐ. அமைப்பின் தீவிர நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) மிகவும் ஆபத்தான இயக்கம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி இருந்தார். மனித உரிமை, அரசியல் மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இவர்கள் செயல்படுவதாகவும், இவர்களுக்கு பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாகவும் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருந்தார். மேலும், கேரள உயர் நீதிமன்றமும் பி.எஃப்.ஐ. மற்றும் அதன் கிளை அமைப்பான எஸ்.டி.பி.ஐ. ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில்தான், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டிருக்கிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் 22 வங்கிக் கணக்குகள் மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடைய 10 வங்கிக் கணக்குகள் என 33 வங்கிக் கணக்குகளில் இருந்த 68.62 லட்சம் ரூபாய் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.