கேரளாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அம்மாநில அரசு பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா என்கிற இஸ்லாமிய அமைப்பு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் வன்முறை சம்பவங்களிலும், தேச விரோத செயல்களிலும் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. ஆகவே, இந்த அமைப்பைத் தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தீயணைப்புப் படையினர் மூலம் கேரள அரசு பயிற்சி அளித்து வருவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலர் மிலிந்த் பாரண்டே கேரள மாநிலம் கொச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், “பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வன்முறை சம்பவங்களிலும், தேச விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த அமைப்பை தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால், இந்த அமைப்பினருக்கு பயிற்சியளிக்கும் பணியில் தீயணைப்பு படையினரை கேரள அரசு ஈடுபடுத்தி வருகிறது. இது கண்டனத்துக்குரியது என்பதோடு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கில், இதை கேரள அரசு செயல்படுத்தி இருக்கிறது. இச்செயலை உடனே நிறுத்த வேண்டும். நாடு முழுதும் மதமாற்ற தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதமாற்றும் செயல்களை தடுக்க வேண்டும். கேரளாவில் ஹிந்து பெண்கள் கடத்தப்பட்டு கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன” என்று கூறியிருக்கிறார்.